தொடர் புகார், பரபரப்புக்கு மத்தியிலும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு ‘விஐபி’ வகுப்பு தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது. அவர் சீருடை அணிவதில்லை என தேசிய மகளிர் ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூருவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஓராண்டாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, அடிக்கடி சிறை விதிமுறைகளை மீறியதாக புகார் எழுந்தது. விதிகளை மீறி தனி அறை, கட்டில் மெத்தை, டிவி உள்ளிட்ட சொகுசு வசதிகளை அனுபவித்து வருவதாக முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா புகார் தெரிவித்தார்.
இதற்கு ஆதாரமாக சசிகலாவும், இளவரசியும் சீருடை அணியாமல் வண்ண உடையில் ஷாப்பிங் பைகளுடன் வெளியே இருந்து சிறைக்குள் நுழைவது போன்ற சிசிடிவி வீடியோ காட்சியை வெளியிட்டார். மேலும் ரூபா, சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்வதற்கு டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீஸார், சத்தியநாராயண ராவ் மீது வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். சத்தியநாராயண ராவ், ‘கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உத்தரவின் பேரிலேயே சசிகலாவுக்கு கட்டில், மெத்தை, தலையணை உள்ளிட்ட வசதிகளை அளித்துள்ளேன். விஐபி வகுப்பு உள்ளிட்ட வேறெந்த வசதிகளையும் வழங்கவில்லை’ என தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் (பொறுப்பு) ரேகா ஷர்மா, பரப்பன அக்ரஹாரா சிறையில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது சசிகலா, இளவரசி ஆகியோர் சீருடை அணியாமல் வண்ண உடையில் இருந்துள்ளனர். இது குறித்து ரேகா ஷர்மா, சசிகலாவிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்கள் நேற்று ரேகா ஷர்மாவிடம் கேள்வி எழுப்பிய போது, ‘‘சிறையில் சசிகலா சீருடைய அணிவது இல்லை. வண்ண உடைகளிலே இருக்கிறார். இது தொடர்பாக சிறை அதிகாரிகளிடம் நான் கேட்டபோது, ‘அவருக்கு விஐபி வகுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே சசிகலா, இளவரசி ஆகியோர் தங்களுடைய சொந்த ஆடைகளை அணிந்துகொள்ளலாம்’ என தெரிவித்தனர். இத்தனை பிரச்சினைகளுக்கு பிறகும், சசிகலா விஐபி வகுப்பு அனுபவித்து வருகிறார் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது”என்றார்.
இதுகுறித்து முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா கூறுகையில், ‘‘சிறை விதிமுறையின்படி சிறை யில் உள்ள அனைத்து தண்டனை கைதிகளும் வெள்ளை சீருடை அணிய வேண்டும். ஆனால் சசிகலா போன்ற கைதிகள் அதிகாரிகளின் துணையுடன் விதிமுறைகளை மீறி வருகின்றனர்”என்றார்.
]
Source link