கீழக்கரையில் கழிவு நீரிலிருந்து மின்சாரம் ! தொழிலதிபர் முயற்சி ! 10 லட்சம் லிட்டருக்கு மேல் கழிவு நீர் கடலில் கலக்கிறது கீழக்கரையில் சாக்கடை நீர் கடலில் கலப்பதால் கடல் மாசடைந்து கடல்வாழ் உயிரினங்ஙகள் அழியும் அபாயம். கீழக்கரை நகராட்சியில் 21வார்டுகள் உள்ளது, இதில் சுமார் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நகராட்சியால் சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் கால்வாய் மூலமாக கடலில் நேரடியாக கலக்கின்றன, இதனால் கடலின் நிறம் மாறி மாசடைந்து காணப்படுகிறது. பல ஆண்டுகளாக எத்தனையோ நகராட்சி நிர்வாகம் மாறிவிட்டாலும் இப்பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது.நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டருக்கு மேல் கழிவு நீர் கடலி கலக்கிறது. ஏற்கனவே பவளபாறைகளை வெட்டி எடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுற்று சூழல் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடா பகுதியில் இதுபோல் சாக்கடைநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கலப்பதால் கடலின் சுற்று சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு கடல் நீர் மாசடைந்து மீன்வளம் குறைந்து வருவதாக கடல்வாழ் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழக பொருளாளர் செய்யது இபுராகிம் கூறியதாவது, பல இடங்களில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி ஆங்காங்கே சாலைகளில் வழிந்தோடுகிறது, இதனால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு பொது மக்கள் அவதிபட்டு வருகின்றனர், நகராட்சி நிர்வாகம் கால்வாய் அடைப்பை சரிசெய்வது, மருந்து தெளிப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுத்து வந்தாலும் தற்காலிக தீர்வாகவே உள்ளது. கழிவுநீர் கடலில் நேரடியாக கலப்பதால் கடல் வாழ் உயிரினங்கள் குறிப்பாக மீன் இனங்கள் அழிவதற்கு அதிக வாய்ப்புகள் அதிகம், சாக்கடைநீரை சாலையில் ஓடவிடாமலும், கடலில் கலப்பதை தடுப்பதென்றால் கீழக்கரை நகரில் பாதாளசாக்கடை திட்டத்தை அமல் படுத்தினால் மட்டுமே நிரந்தர தீர்வாகும். இதன்மூலம் சாக்கடை நீர் சுத்திகரிக்கப்பட்டு தண்ணீரை விவசாய பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம், ஆய்வு பணிகளெல்லாம் முடிக்கப்பட்ட இத்திட்டம் பல ஆண்டுகளாக விரைவில் துவங்கும் என்ற அறிவிப்பு மட்டுமே உள்ளது. ஆண்டுகள் கடக்கும் போது இதற்கான திட்ட மதிப்பீடும் அதிகரிக்கும், எனவே விரைந்து செயல்படுத்த வேண்டும். இத்திட்டம் செயல்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டு தாமதமாகும் பட்சத்தில் தற்போது உடனடி நடவடிக்கையாக கடலில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரித்து கடலில் விடுவதற்கோ அல்லது விவசாய பணிகளுக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்து கடல்வாழ் உயிரினங்களை காப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். இது குறித்து கழிவு நீரிலிருந்து மின்சாரம் என்ற நீண்ட கால திட்டமிடலில் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கீழக்கரை தொழிலதிபர் பி எஸ் அஹமது புஹாரி முயற்சி கொண்டுள்ளார். இது தொடர்பான தொழில்நுட்ப வல்லுனர் மனோகரன் என்பவர் மூலம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் பல வழிகளில் தயாரிக்கப்படுகிறது. நிலக்கரி, தண்ணீர் மற்றும் காற்று மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணு உலைகளில் இருந்தும் மின்சாரம் தயாராகி வருகிறது. தற்போது கழிவு நீரின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்பம் உள்ளது. அதி நவீன தொழில் நுட்பத்தின் மூலம் கழிவு நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம். பின்னர் அது சுத்தமான நீராக மாறிவிடும். அதை குடிநீராக பயன்படுத்த முடியும்.
