திருக்கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நன்னாளில் கோவில்களிலும், வீடுகளிலும் இடம் பெறும் சிறப்பான தீபத்திருநாளாகும்.
தமிழகத்தில் உள்ள எல்லா ஆலயங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செயப்படுகிறது. திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. நிறைவு நாள் விழாவாக பரணி தீபம் ஏற்படும் போது மலை உச்சியிலிருக்கும் அண்ணாமலையாருக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.
ஏழு அடி உயரம் உள்ள செப்பு கொப்பரையில் 3000 கிலோ நெய் ஊற்றி 1000 மீட்டர் கடா துணியால் செய்த திரியில் இந்த ஜோதி ஏற்றப்படுகிறது.
சிவன் கோவில்களில் பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து சொக்கப்பனை கொளுத்துவார்கள். அதில் தெரியும் ஜோதியை தரிசனம் செய்வதால் நன்மைகள் கிடைக்கும்.
தீபத் திருநாளில் கோவில்கள் தவிர இல்லங்களிலும் தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீபத்திருநாள் அன்று வீட்டை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். பூஜை அறையையும் சுத்தப்படுத்தி சுவாமி படங்களையும் நன்கு துடைத்து சந்தணம், குங்குமம் வைத்து பூச்சரம் போட்டு அலங்கரிக்க வேண்டும்.
வீட்டில் விளக்கு கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும். மாலையில் 6 மணிக்கு பூஜை அறை, மற்றும் எல்லா இடங்களிலும் அகல் விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். பார்ப்பதற்கு ஜெக ஜோதியாக காட்சி அளிக்கும்.
இந்த நல்ல நாளில் கார்த்திகை கொழுக்கட்டை, கார்த்திகைப் பொரி செய்து கடவுளுக்கு படைத்து சகல நலமும் பெறுவோம். எல்லோருக்கும் திருக்கார்த்திகை வாழ்த்துக்கள் !!
நன்றி
சாரதா
எனது கார்த்திகை கொழுக்கட்டை பதிவை பார்க்க இங்கே கிளிக் பண்ணவும்.