டிசம்பர் 10-ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெறவுள்ள நோபல் விருது வழங்கும் விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்க வேண்டும் என தான் விரும்புவதாக நோபல் அமைதி விருது பெற்றுள்ள மலாலா யூசுப்சாய் தெரிவித்துள்ளார்.

இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் இருவரும் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பகிர்கின்றனர். 

குழந்தைகள் நல உரிமைகளுக்காக பல்வேறு அமைதிவழிப் போராட்டங்களை நடத்தியது, குழந்தைகளின் கல்விக்கான உரிமைகளுக்காக போராடியது உள்ளிட்ட இவர்களது தன்னலமற்ற பங்களிப்புக்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நார்வே நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இளம் வயதில் நோபல் அமைதி விருது பெறும் முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ள மலாலா (17), விருது நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்க வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

விருதுக்கான பரிசுத் தொகை 1.11 மில்லியன் டாலரை மலாலாவும், பச்பன் பச்சாவோ அந்தோலன் நிறுவனர் கைலாஷ் சத்யார்த்தியும் பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்தியா – பாகிஸ்தா எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியர் ஒருவருக்கும், பாகிஸ்தானியர் ஒருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள் அமைதிக்கான நோபல் விருது, ஆசிய துணைக்கண்டத்தில் அமைதி ஏற்படுத்த முக்கிய பங்களிக்குமா என்ற கேள்விக்கு ‘தி இந்து’ (ஆங்கில) நாளிதழுக்கு பதிலளித்துள்ள நோபல் கமிட்டி தலைவரும், நார்வே பிரதமருமான தோர்ஜோர்ன் ஜக்லாண்ட் “சர்ச்சைக்குரிய பகுதியில் அமைதியை நிலைநாட்ட இந்த விருது பங்களிக்கும் என்றால் அது வரவேற்கத்தக்கதே” என்றார்.

இந்த வருடம் நோபல் அமைதி விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 278 பேர் இருந்ததாக தெரிகிறது.

இந்தப் பட்டியலில் அமெரிக்க கண்காணிப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளை உலகுக்கு அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடன், போப் பிரான்சிஸ், பலாத்காரத்துக்கு ஆளான பெண்களுக்காக போராடி வரும் காங்கோ தலைவர் டெனில் முக்வேகே ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன என்பது கவனிக்கத்தக்கது.

Source